ராமநாதபுரம் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 827 மி.மீ. நடப்பாண்டில் 1,33,709 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
இந்நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, மழை நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அறுவடை நேரத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து, பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மைத் துறை இணை இயக்குநர் குணபாலன், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் சேக் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மாஸ்டர் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு