ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த மூன்று நாள்களாக மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் அதிகளவில் நல்ல மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 21) காலையும் ராமேஸ்வரம் முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதிகள் வரை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன்கூடிய கனமழை பெய்தது.
மெய்சிலிர்க்க வைத்த அரிய காட்சி
அப்போது மண்டபம் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு முன்னதாக, மேகங்கள் கடல்நீரை நீராவியாக உறிஞ்சும் அரிய காட்சி நிகழ்ந்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இதனை அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது இது தொடர்பான காணொலி வெளியாகி வைரலாகிவருகிறது. இதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் தனுஷ்கோடி பகுதியில் கடல்நீரை மேகம் உறிஞ்சும் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஈபிஎஸ்