ராமநாதபுரம் நகருக்குள் செல்லும் சாலையை நான்கு வழிச் சாலையாக்கி மாதிரி சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை மத்திய அரசிடம் நிதி கோரியது. அதனடிப்படையில் மத்திய சாலை திட்ட நிதியிலிருந்து 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ராமநாதபுரம் நகருக்குள் செல்லும் சாலையை அச்சுந்தன்வயல் முதல் பட்டணம் காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை வரையுள்ள 8.3 கி.மீட்டர் தூரத்தை நான்கு வழிச் சாலையாகவும், சாலையின் நடுவே தடுப்புச்சுவர், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இப்பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை கண்காணித்துவருகிறது. தற்போது சாலை அமைக்கும் பணியை ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி ஆய்வு செய்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளர் மாரியப்பன் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி, "மத்திய அரசு ஒதுக்கியுள்ள 38 கோடி ரூபாய் நிதியில் ராமநாதபுரம் நகருக்குள் செல்லும் சாலைப்பணி தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் முடிந்தபாடில்லை. மரங்கள் இருப்பதால் சில இடங்களில் பணிகள் முழுமை பெறாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலை 15 மீட்டர் அகலத்திலும், நடுவில் 61 செ.மீட்டரில் தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டுவருகிறது.
ஒப்பந்தப்படி சாலை அமைக்கப்படுகிறதா? முறையாகவும், தரமாகவும் அமைக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வந்தேன். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் அதற்கான கருவிகளுடன் வரவில்லை. இதனை முறையாகவும், தரமாகவும் அமைக்கவில்லையென்றால் தொடர்ந்து வலியுறுத்துவேன். இந்த சாலைப் பணி முறையாக அமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி நானே போராட்டம் நடத்துவேன்" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: CAA-க்கு எதிராக கோட்டை நோக்கி பேரணி - 10 ஆயிரம் போலீஸார் குவிப்பு