புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் தாயார் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரின் மீது வழக்குப் பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி சத்யா, அந்த இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் பாலியல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி கட்டக்கூடிய அபராதத் தொகையிலிருந்து ரூ.2 லட்சத்தை நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளியை காவல்துறை பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.