புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே கருகப்புலாம்பட்டியை சேர்ந்த சசிகலா என்பவருக்கும் சொக்கநாதபட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி தற்கொலை செய்து இறந்துவிட்டார்.
இறந்த சுப்பிரமணிக்கு லோகேஸ்வரன் (6), ஹரிகிருஷ்ணன் (4) என்ற மகன்கள் உள்ளனர். கணவனை இழந்து வறுமையில் தனித்து வாழ்ந்து வந்த சசிகலாவை அக்கம்பக்கத்தினர் அவதூறாக பேசி வந்துள்ளனர். சசிகலாவை அவதூறாக பேசி வந்ததை பார்த்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் சரவணன், அப்பெண்ணை திட்டியதை காதில் கேட்டதில் வேதனையடைந்து, சசிகலாவின் மீது சரவணனுக்கு இரக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இரக்கம் பின்பு காதலாக மலர்ந்துள்ளது.
அந்த காதலை சசிகலாவிடம் சரவணன் தெரிவிக்க, ஏற்க மறுத்த சசிகலா பிறகு, சரவணன் மீது நம்பிக்கை எழுந்து காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் கோவை சென்று ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்பொழுது சரவணனுக்கு 17 வயது மட்டுமே ஆகியிருந்த நிலையில் சரவணனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையினர் தலையிட்டு சரவணனின் வயதைக்காரணம் காட்டி இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். இருவர்களுடைய அந்தப் பிரிவு மேலும் அவர்களுக்கு காதலை வலுப்படுத்த உதவியது. இந்த காதல் தொடர்வது சரவணன் குடும்பத்திற்கு தெரியவே குடும்பத்தினர் சரவணனை கடுமையாகத் திட்டி மிரட்டி உள்ளனர். இதனால் மனம் உடைந்த சரவணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் அருந்தி உயிருக்கு போராடி, சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.
தனது காதலை மீண்டும் சசிகலாவிடம் தெரிவிக்க வேறு வழியின்றி இருவரும் சேர்ந்து கோவைக்குச் சென்று மீண்டும் திருமணம் செய்து கொண்டு, கோவையில் ஒன்றரை ஆண்டு காலம் கட்டட கூலி வேலை செய்து கொண்டு சசிகலா மற்றும் அவரது குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார், சரவணன். இந்நிலையில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாக ஊர் பெரியவர்கள் ஊருக்கு அழைத்துள்ளனர்.
இதனை முழுமையாக நம்பி சொந்த ஊருக்கு வந்த ஜோடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் சேர்த்து வைப்பதாக சொன்னவர்கள், ’ரூ.5 லட்சம் பணம் ஊருக்கு கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்போம்; இல்லையென்றால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறோம், இதனால் இருவரும் சந்திக்கக் கூடாது’ என்று மிரட்டி அந்த காதல் ஜோடியைப் பிரித்து வைத்துள்ளனர்.
இந்த பிரிவால் மனமுடைந்த சரவணன் 3 பக்கத்திற்கு கடிதம் எழுதி வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள கிளம்பியுள்ளார். இதனால் பதறிய நண்பர்கள் அவரை தீவிரமாகத் தேடி உள்ளனர். இரண்டுநாள் தீவிர தேடுதலுக்கு பிறகு அவரை கண்டுபிடித்த பிறகு, அவருடைய நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அவரை தற்கொலை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
பின்பு சமூக ஆர்வலர்கள் சிலரின் உதவியை நாடிய சரவணன், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். காலம் உள்ளவரை சசிகலா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் தான் வாழ்வேன் என்றும்; சசிகலாவின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளை போல் பார்த்துக் கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். விரைவில் சட்ட முறைப்படி திருமணம் செய்து கொண்டு அவர்கள் முன்னிலையில் வாழ்ந்து காட்டுவோம் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வீடு புகுந்து பெண் கடத்தல் - பதறிய பெற்றோருக்கு டிவிஸ்ட் கொடுத்த மகள்