புதுக்கோட்டை: உலகிலுள்ள அனைத்து உயிர்களின் குறைந்தபட்ச கடமை வாழ்தல் என்றால் அதிகபட்ச கடமை வாழ்வித்தலே ஆகும். இந்த உலகில் உள்ள உயிரினங்களிலேயே மனிதர்களுக்கு மட்டும் தான் மற்ற உயிரினங்களையும் வாழ வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களில் மனிதர்கள் ஆர்வம் காட்டி வருவதினால் என்னவோ, பல்வேறு இடங்களில் இயற்கையின் கோபத்தை எதிர்கொள்ளும் சூழல்களும் ஏற்படுகின்றது. நம்முடைய முன்னோர்களின் கூற்றுப்படி வாழு, வாழ விடு என்பதற்கு உதாரணமாக புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஜமானி மற்றும் செல்லப்பிராணிகள் இடையேயான பிரியத்தை வெளிப்படுத்துவது போன்று தற்போது சமூக வலைத்தளங்களில் நிரம்பும் வீடியோக்களின் வரிசையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அணில் ஒன்று அதன் உயிரைக் காப்பாற்றிய எஜமானியிடம் அன்பாய் பழகும் வீடியோ சமூக வலைத்தள வாசிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயில் எதிரே தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார் கலைச்செல்வி, முருகேசன் தம்பதியினர். இந்நிலையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று இவர்களது கடை அருகே சிறிய அணில் ஒன்று உடல் முழுவதும் அடிபட்டு, இறக்கும் தருவாயில் நாய்கள் கடிக்க முற்பட்ட நிலையில் கண்டுள்ளனர்.
அப்போது கலைச்செல்வி, முருகேசன் தம்பதியரின் மகன் நாய்களிடமிருந்து அந்த அணிலை மீட்டு, அதற்குச் சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் அதன் உயிரைக் காப்பாற்ற இங்க் ஃபில்லர் மூலம் அணிலுக்குப் பால் கொடுத்துப் பராமரித்து வந்துள்ளனர். பின்னர் அந்த அணிலுக்கு ராமு என்று பெயர் சூட்டி அவர்களுடனே வளர்த்து வந்துள்ளனர்.
ராமுக்கென தனி ஒரு கூண்டு தயாரித்து, அந்த கூண்டைத் தினம்தோறும் வீட்டிலிருந்து கடைக்கு வரும்போது எடுத்து வந்து, பின்னர் வீட்டிற்குச் செல்லும்போது எடுத்துச் சென்று குடும்பத்தில் ஒரு குழந்தையைப் போல் வளர்த்து வந்துள்ளனர். அதற்குப் பால், பிஸ்கட், பழம், சாதம் என அனைத்தையும் கொடுத்து உள்ளனர். ஒரு காலகட்டத்தில் ராமுவை சுதந்திரமாக்கத் திட்டமிட்டு ராமுவை கூண்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
கூண்டிலிருந்து வெளியேறிய ராமு, பக்கத்தில் உள்ள மரங்கள், கடைகளில் ஓடி ஆடி விளையாடி உணவு நேரத்திற்கு கலைச்செல்வியிடமே திரும்புவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களைக் கண்டால் தெறித்து ஓடும் ராமு, கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினருடன் மட்டும் விளையாடுகின்றது. இது மட்டுமின்றி கலைச்செல்வி குடும்பத்தினர் கொடுக்கும் உணவை வாங்கி உண்ணும் அணில், அவர்கள் மீது ஓடி ஆடி, துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்ப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக அளிக்கிறது என கலைச்செல்வியின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கலைச்செல்வி நம்மிடம் கூறியதாவது, "கடந்த ஒரு வருடமாக இந்த அணிலை வளர்த்து வருகிறோம். ராமு என்று அழைத்தாலே ஓடி வந்து எங்களது உடம்பில் ஓடி ஆடி விளையாடி, தோளில் வந்து அமர்ந்துவிடும். நாங்கள் கொடுக்கும் பால், பிஸ்கட், இட்லி, சாதம் என அனைத்தையும் சாப்பிடும். ராமுவை எங்களால் ஒருநாள் கூட பிரிந்து இருக்க முடியவில்லை. கவலையாக நாங்கள் இருக்கும் போது ராமு எங்கள் மீது அமர்ந்து துள்ளிக் குதித்து விளையாடும் போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!