புதுக்கோட்டை: புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன் குமார் தலைமையில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (அக்.27) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 5,163 தொழிலாளர்கள் மற்றும் இறந்த தொழிலாளர்களின் நியமனதாரர்களுக்கு 1.01 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வாரிய தலைவர் பொன் குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பொன் குமார் பேசுகையில், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 18 வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியம் 1994இல் அமைக்கப்பட்டது. இருப்பினும் பிற அனைத்து வாரியங்களையும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் அமைத்து, அதற்கு திட்டங்களை தீட்டி, சிறப்பாக செயல்படுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ததன் விளைவுதான், இந்த வாரியத்தில் இவ்வளவு தொழிலாளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.
குறிப்பாக, கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த வாரியங்கள் செயலற்று கிடந்தது. வாரியத்தில் இருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாரியத்தின் மீது நம்பிக்கை இழந்து, தங்களுடைய பதிவைப் புதுப்பிக்காமல் வெளியேறிச் சென்று விட்டனர். ஏறத்தாழ 20 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமான வாரியத்தில் இருந்து வெளியே சென்று விட்டனர்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு அவருடைய தொடர் முயற்சி, கடும் உழைப்பின் விளைவாக வாரியத்தில் நாங்கள் கொடுத்த அனைத்து திட்டங்களையும் ஏற்றுக் கொண்டு, உடனுக்குடன் அறிவித்ததனுடைய விளைவாக திட்டத்தினுடைய பணப் பலன்களை இரட்டிப்பாக்கி இருக்கிறோம்.
வீட்டு வசதி திட்டம், மருத்துவ திட்டம், நிரந்தர தீர்க்க முடியாத நோயாளிகளுக்கு உதவக் கூடிய திட்டம், மருத்துவக் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை ஏற்கக் கூடிய திட்டம், இப்படிப்பட்ட புரட்சிகரமான இந்த திட்டத்தின் ஈர்ப்பால் இன்றைக்கு புதிதாக 25 லட்சம் தொழிலாளர்கள் அனைத்து வாரியங்களிலும் சேர்ந்திருக்கின்றனர். இது அனைத்தும் இந்த ஆட்சியின் மீது தொழிலாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் என்பது ஒரு அரிய திட்டம். நான்கு லட்சம் ரூபாய் இலவசமாக கொடுக்கின்றோம். இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி திட்டம். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எந்தெந்த திட்டங்களை தமிழ்நாட்டில் அறிவிக்கிறாரோ, அந்தத் திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையை நாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எனவே, அப்படிப்பட்ட திட்டத்தை இன்று முதல் முறையாக புதுக்கோட்டையில் இரண்டு பயனாளிகளுக்கு வீடு வழங்குவதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு வழங்க வேண்டும் என்கிற இலக்கை எட்ட முடியாமல் இந்த விதிமுறைகளில் அதிக தடங்கல் இருக்கின்றன.
அந்த காரணத்தினால், கடந்த வாரம் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து பேசி, எப்படி எளிமைப்படுத்தலாம், உண்மையான தொழிலாளிக்கு போக வேண்டும், ஆனால் எளிமையாக விரைவாக செல்ல வேண்டும். அதற்கான ஆலோசனைகளைப் பெற்று அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, எளிமையாக்கி அடுத்த ஆறு மாதத்திற்குள் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவது என்ற இலக்கை நோக்கி இந்த வாரியம் பயணித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு, உதவி கணக்கு அலுவலர் கருப்பையா மற்றும் கண்காணிப்பாளர் சத்திய சாய் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு கெடுபிடி.. சுங்கத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பயணிகள் அதிருப்தி!