புதுக்கோட்டை: கடல் கடந்து வந்த காதலுக்கு மதிப்பு கொடுத்து, கரம் சேர்த்து வைத்த புதுக்கோட்டை மாவட்டம் பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் - புவனேஸ்வரி தம்பதி. பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் அருணகிரி என்கிற அருண்பிரசாத் 22 வயதில் எம்பிஏ படித்துவிட்டு போலாந்து நாட்டில் வேலைக்காக சென்றார்.
அங்கு பணிக்குச் சேர்ந்த பிறகு சிறிது காலத்தில் தனியாக கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த அனியா என்கின்ற அன்னா ரில்ஸ்கா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி, அருண் பிரசாத்தை அனியா திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருவருமே போலாந்து நாட்டில் சட்டமுறைப்படி நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து உறவினர்களிடம் அருண்குமார் கூறியவுடன் அருண்குமார் பெற்றோர், இவர்கள் காதலுக்கு மரியாதை கொடுத்து, இரு மனங்களையும் ஒப்புதல் தெரிவித்ததோடு, இந்த திருமணத்தை தமிழ் பண்பாடு, கலாச்சாரப்படி நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
இந்தியா கலாச்சாரம் மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட அனியாவும் இந்தியாவுக்கு வர வேண்டுமென ஒரே முடிவில் இங்கு நடைபெறும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காதலர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்து புதுக்கோட்டை, அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ள செல்லுக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருமணம் இன்று (ஜூலை 09) கோலகலமாக நடைபெற்றது.
அனியா தமிழ் கலாச்சாரப்படி பாரம்பரிய உடையான பட்டுப் புடவை அணிந்து மேடையில் தோன்றி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் அங்கு நடைபெற்று வந்த திருமண கலாச்சார ஏற்பாடுகளை கண்டு வியந்தார். மணமக்கள் இருவருக்கும் இந்து முறைப்படியும் தமிழ் கலாச்சார படியும் மேளதாளங்கள் முழங்க திருமண நிகழ்வு இனிதே நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டு அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த இரு மனங்கள் இணையும் விழாவில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் பெரியவர்கள் என பலரும் பங்கேற்று புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறினர். கடல் கடந்து வந்த காதலுக்கு மதிப்பு கொடுத்து, கரம் சேர்த்து வைத்த பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து மணமகன் அருண் தெரிவிக்கையில், “புதுக்கோட்டையில் பிறந்து, பணி நிமித்தமாக போலந்து நாட்டுக்கு சென்று எனக்கு அனியாவுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி எங்கள் மனதை பறிகொடுத்தோம். அதனைத் தொடர்ந்து எங்களது காதலை இருதரப்பு பெற்றோர்களிடம் தெரிவித்தோம். எங்களது பெற்றோர்கள் எங்களது காதலை மதித்து, எங்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
மேலும் அனியாவிற்கு இந்திய கலாச்சாரம் பிடித்து போகவே, இந்து முறைப்படி திருமணம் நடந்தேறி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு அனியாவிற்கு இந்திய கலாச்சாரத்தை எடுத்துரைக்க வகையில் கோவில்கள் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல உள்ளேன்” என்றார்.