புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உள்ள கொல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், வினோத் (32). இவருக்கும் ரெகுநாதபுரம் அருகே உள்ள பந்துவாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த விசித்திரா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதில் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், ஜாதக பொருத்தம் இல்லாததால் இவர்களின் காதலுக்கு விசித்ராவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வினோத் - விசித்திரா ஆகிய இருவரும் நேற்று (பிப்.14) புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் திருமணம் முடித்த கையோடு இருவரும், நேற்று இரவில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தஞ்சம் அடைந்துள்ளனர். ஏற்கனவே விசித்திராவை காணவில்லை என அவரது பெற்றோர்கள் ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து காதல் ஜோடிகளின் குடும்பத்தினருக்கு காவல் துறையினர் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு வந்த தம்பதியின் பெற்றோர்களிடம், ‘அவர்கள் இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
எனவே அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது’ என காவல் துறையினர் கூறினர். பின்னர் காதல் தம்பதியை காவல் நிலையத்தில் இருந்து மணமகனான வினோத் வீட்டுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை - கணவர் கைது!