புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசு வழங்குதல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் விஜயபாஸ்கார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு, பொங்கல் பரிசினை வழங்கினார்.
அதனையடுத்து பேசிய அவர், அதிமுக அரசு பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இத்திட்டத்தை தொடங்கியது. தற்பொழுது அதை செயல்படுத்தும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 ரொக்கம், வேட்டி சேலையினை வழங்கி வருகிறார்கள்.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய தினம் முதல் வரும் 13ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,53,340 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் இந்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாட முடியும். எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிக அளவில் ஜல்லிக்கட்டு நடக்கக்கூடிய மாவட்டம் புதுக்கோட்டைதான், அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு சிறப்பாக நடைபெறும் என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? - கமலாலயத்தில் தீவிர ஆலோசனை