புதுக்கோட்டை: திமுக, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது. அதன்படி, சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பல குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி தாலுகா, பூம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் 56 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், “மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்காக நாங்கள் பதிவு செய்தோம். ஆனால், எந்த குறுஞ்செய்தியும் எங்களுக்கு வரவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தனர். ஒரு கிராமத்தைச் சேர்ந்த எந்த ஒரு குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை கிடைக்காததால் சம்பந்தப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவைச் சந்தித்து பெண்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு அலுவலர்களை உடனடியாக நியமித்து, மகளிர் உரிமைத் தொகை குறித்த விபரங்களை கிராமத்தைச் சேர்ந்த பெண்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், 300க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்காசியில் யானை தந்தங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது!