புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் காவல் நிலையம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் வைரமணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும், இவர் பல்வேறு கோயில் விழாக்கள் மற்றும் அனைத்து விதமான விழாக்களுக்கும் பட்டாசுகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பட்டாசு ஆலை விடுமுறையையொட்டி, உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட ஆறு பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து உடனடியாக குறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின், விபத்தில் சிக்கி இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 5 பேரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேருக்கும், தீக்காயம் அதிகமாக இருந்ததால், கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், 80% தீக்காயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேரில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் கம்மாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து (வயது 31) என்பவர் கடந்த 3ம் தேதி இரவு 9.15 மணியளவிலும், கோவில்பட்டியைச் சேர்ந்த திருமலை (வயது 30) என்பவர் கடந்த 4ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவரும் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்து எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தமிழ்நாடு அரசு சார்பில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத்தேர்தலில் 40க்கு 40 பெறுவது தான் நம் லட்சியம் - திமுக கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!