புதுக்கோட்டை: வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான கருணாநிதியின் கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்பித்தல் போட்டி இன்று (நவ.6) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி போட்டியை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சி மேடையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்களை ஒப்புவித்தல் போன்றவைகள் மூலம் தங்களது திறமைகளை மிகவும் அருமையாக காட்சிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'இந்தியா கூட்டணி (INDIA Alliance) வெற்றி பெற்றப் பின்பு, பாஜக தலைவர் அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும். எனது ஊழல் வழக்கு குறித்து அண்ணாமலை பேசுகிறார். எனது வழக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்குள் கருக்கா வினோத் வெடிகுண்டு வீசவில்லை. ஆளுநர் மாளிகை போகும் வழியில் பெட்ரோல் குண்டு வீசியது. இதனால், எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீன் எடுத்தது, பாஜகவினர். வேண்டுமெனில், மீண்டும் பாஜகவினரே தற்போதும் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்துப் பெருமையை தேடிக் கொள்ளலாம்.
நீட்டைப் பற்றி (NEET Exam) பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில் தான், கருக்கா வினோத்தும் பேசியுள்ளார். அண்ணாமலை வேண்டுமானால், எங்களோடு சேர்ந்து நீட்டு விலக்குக்கு ஆதரவு கொடுக்கட்டும். ஆளுநர் மீதான வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எவ்வாறு வாதிகள் என்று தலைமை வழக்கறிஞர்களிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது அவர்கள் அவ்வாறு வாதாடுவார்கள் என்று பேட்டி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளருமான கவிதைப்பித்தன், மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களின் பள்ளி செல்லாத 8 ஆயிரம் குழந்தைகள்..! கல்வி கண் திறக்க அரசு மனது வைக்க கோரிக்கை!