புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர் தலைவர் நியமிப்பதற்காக, அறங்காவலர் குழு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் பொறுப்பேற்கும் விழா புதுக்கோட்டையில் நேற்று (பிப்.26) நடைபெற்றது.
இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, புதிதாகப் பதவி ஏற்ற அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சட்டத்திற்குப் புறம்பாகப் பிரச்சாரம் செய்யவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைவரும் திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர். நாங்கள் செல்லும் இடமெல்லாம் கை சின்னத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதை, களத்தில் நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் புரிந்துணர்வு இருப்பதாகக் கூறுவது முட்டாள்தனமான வாதம்.
ஆறுமுகசாமி அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விஷயத்திலும் மக்கள் முன்பாக அறிக்கை வைத்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் குடும்பத் தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது, தேர்தல் விதிமுறை மீறல் அல்ல. இருப்பினும், அதிமுக தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், திமுக சந்திக்கத் தயார்.
மேலும் அதிமுக தொடர்பான வழக்கில், நீதிமன்றம் அவர்களுக்கு கீழமை நீதிமன்றங்களின் வாய்ப்பு அளித்துள்ளது. கீழமை நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளிக்கிறதோ, அதை பொறுத்துதான் அதிமுக நிலைமை தெரிய வரும். திருமங்கலம் பார்முலா, ஈரோடு கிழக்கு பார்முலா என்று கூறுவதை தவிர ஆர்.கே.நகரில் ஒரு பார்முலா நடத்தப்பட்டதை யாரும் கூற மறுப்பது ஏன்?
அமைச்சர்கள் அனைவரும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகச் சென்றோம். அதைத் தவிர எந்த விதமான தேர்தல் விதிமுறைகளையும் மீறவில்லை” என்றார்.
இதையும் படிங்க: தொடங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்!