புதுக்கோட்டை: ஆலங்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்குதல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சுற்றுச்சுவர், பொது சுகாதார வளாகம் திறப்பு என்னும் முப்பெரும் விழா நேற்று (டிச.26) நடைபெற்றது.
இதில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு, படேல் நகரைச் சேர்ந்த 61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் நலனிற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர், முதலமைச்சர் பதவி பொறுப்பேற்ற 30 மாதங்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாகக் கொண்டு வந்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் இருப்பிட வசதியை உறுதி செய்யும் வகையில், விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆலங்குடி வட்டம், படேல் நகரில் 61 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
தென் மாவட்ட மழை: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் 116 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்றாலும், உலகம் வெப்பமயமானதால் ஓராண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்தது. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பேரிடரை மிகச் சிறப்பான முறையில் கையாண்டு தென் மாவட்ட மக்களை பாதுகாத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு: முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுடைய பண்பாடு, கலாச்சாரம், வீரம் ஆகியவற்றை பாதுகாக்கின்ற வகையில், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான அனுமதியை வழங்கினார். அதேபோல், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டர்..! காஞ்சிபுரத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன..?