புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி என்ற சின்ன பூசாரி வயது 66. இவர் மாந்திரீகம் செய்வதாக கூறி அப்பகுதி மக்களிடம் பல்வேறு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 15 வயது சிறுமி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்த நிலையில் கடந்தாண்டு அவரது பெற்றோர் பழனி பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது பூசாரி பழனியோ அந்த சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அந்த பேயை தாய் விரட்டுவதாக கூறி பெற்றோரை வெளியே அமரவைத்துவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
ஒரு மாதம் கழித்து சிறுமி கர்ப்பமான போது பெற்றோர் விசாரித்தபோது தான் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டது.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை செய்த நீதிபதி சத்யா 15 வயது சிறுமியை தொடர்ந்து இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டிற்கு, சின்ன பூசாரிக்கு ஆயுள் தண்டனையும், இதை வெளியே கூறினால் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு ஆண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையும் மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தொகை மூன்று லட்சம் ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் சேர்த்து, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடாக சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டனை பெற்ற சின்ன பூசாரி தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடிய சம்பவம் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.