இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தொற்று பரவலிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையே வாகனங்களில் பயணிக்க அவசியம் இ-பாஸ் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இ-பாஸ் பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து, வெளி மாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து, மினிபஸ், மேக்ஸி கேப் உள்ளிட்ட எவ்வித பயணிகள் வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்ற பின்னரே இயக்க வேண்டும். இ-பாஸ் பெறாமல் இயக்கி பயணிகளுடன் மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் பிடிபட்டால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு தொடரப்படும்.
மேலும் வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் மீது வட்டார போக்குவரத்து துறையின் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்திற்குள் இயக்கப்படும் வாகனங்களை பொறுத்தமட்டில் அத்தியாவசிய, அவசர தேவைகளுக்கு மட்டும் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் நபர்கள் பயணிக்கவும், முகக்கவசம், கையுறை பயன்படுத்துவதை தவறாமல் கடைப்பிடித்து பயணம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
பொது மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை வாகன உரிமையாளர்கள் தவறாது பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.