புதுக்கோட்டை: திருமயம் அருகேவுள்ள மெய்யபுரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தில் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹெச். ராஜா திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார், வரும் மே 25ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து ஹெச். ராஜா உள்ளிட்ட 19 பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, “மக்கள் திமுக ஆட்சியை அருவருப்பாகப் பார்க்கிறார்கள். கி. வீரமணி ஒரு கிணற்றுத்தவளை. ஆட்டுக்கு தாடி தேவையில்லை என்று கி. வீரமணி சொன்னால், நல்ல சவரக்கத்தியா எடுத்து தாடியை மழிக்கலாம். கார்ல் மார்க்ஸ் ஒழுக்கம் கெட்டவர். முத்தரசனுக்குக்கு உண்டியல் தெரியும்; உறங்கத்தெரியும்; உண்டு உறங்கத் தெரியும்.
ஈரோட்டில் இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் அடைத்து வைத்தது தெரிந்தும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தது தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்குச் சமம். இந்த தேர்தலில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
திமுக ஆட்சியில் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. திருட்டுச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளன. பிரதமரிடம் உதயநிதி மன்னிப்புக்கேட்க போனாரா அல்லது வேறு எதற்கும் போனாரா என்று தெரியவில்லை. நாட்டுக்கு ஆளுநர் என்பது அரசியல் அமைப்பில் உள்ளது. ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் என்று திக, திமுகவினர் கூறுகின்றனர். ஆட்டுக்கு தாடி தேவையில்லை என்றால் நல்ல சவரக்கத்தியை எடுத்து ஆட்டுகளிடம் செல்லவேண்டும்” என விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: சி.விஜயபாஸ்கர் தொடர்பான கருத்துக்கு எதிரான தடையை நீக்க மறுப்பு!