புதுக்கோட்டை: கறம்பக்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது கோயிகளில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இன்னும் இந்த வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், பட்டியலின மக்கள் வழிபட மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் 9 கோயில்களிலும் நேற்று (ஜன.4) புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதற்கட்டமாக ஏழு கோயில்களில் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாகவே இணைந்து வழிபாடு செய்வதை உறுதி செய்துள்ளனர். மேலும் அதிகாரிகளுடன் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் அந்தந்த கோயில்களில் சென்று நேற்று (ஜன. 4) வழிபாடும் செய்தனர்.
மீதமுள்ள இரண்டு கோயிலுக்கும் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், பின்னர் ஆய்வின் அறிக்கையை நீதிமன்றம் கேள்வி எழுப்பும் பொழுது சமர்ப்பிக்க உள்ளதாகவும் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.