தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(25). திருமணம் ஆகாத இவர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக டெப்போவிற்கு சென்றுள்ளார். அப்போது பணிமனையில் இருந்த பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதையறிந்த சக ஓட்டுநர்கள் மற்றும் அங்கிருந்த சக ஊழியர்கள் புண்ணியமூர்த்தியை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அங்கு சிகிச்சை செய்ய முடியாததால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதில் ஆத்திரமடைந்த உடன் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் வேலையை புறக்கணித்தனர். மேலும், தற்போது இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையில் முழுமையாக சுத்தம் செய்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனால், அனைத்து பேருந்துகளும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயங்காததால் கந்தர்வகோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.