புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கட்டுமாவடி முகம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அதேப் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், இன்று அதிகாலை கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ராஜாவிற்கும், தீயணைப்புப் படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்துள்ளது.