புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (45). ஜெய்சங்கருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தனது மகனைக் அழைத்துக் கொண்டு ஜெய்சங்கரின் மனைவி தனியாக சென்று விட்டார். 17 வயதே நிரம்பிய மகள் மட்டும் ஜெய்சங்கருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெய்சங்கரின் மகள் தனது தாயிடம் வந்து கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜெய்சங்கர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ந்த அவரது தாய், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெய்சங்கர் மீது புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஜெய்சங்கரைக் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று (மார்ச்.18) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஏழு ஆண்டு சிறையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும், 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மேலும் ஏழு ஆண்டு சிறையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகள் அள்ளிவிடும் வாக்குறுதிகள் : சீமானின் கவுன்ட்டர்