புதுக்கோட்டையில் சசிகலா சகோதரர் திவாகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை இணைக்கவே சசிகலா விரும்புகிறார். எல்லோரும் சேர்ந்தால் தான் அது அதிமுக என்பதில் சசிகலா தெளிவாக உள்ளார். அதற்கான முயற்சியில் உள்ளார். அது விரைவில் நிறைவேறும். அனைவரும் ஒன்றிணைவதற்கான சூழல் தற்போது உருவாகி வருகிறது.
ஓபிஎஸ்-ஐ இதுவரை சசிகலா சந்திக்காததற்கு காரணம், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்துப் பார்க்கவே அவர் விரும்புகிறார். சசிகலா வேறு ஒரு வழியில் அதிமுகவினர் அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புகிறார். அதிமுக பிரிந்தது மாதிரி தெரிகிறதே தவிர, ஆனால் ஒன்றாகத்தான் இருக்கிறது. அது விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளேயே ஒன்றிணையும்.
தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள பிரச்சனை சுமூகமான முறையில் செல்ல வேண்டும். இவர்களுக்குள் நடக்கும் பிரச்னையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநருக்கும் திமுக அரசுக்குக்கும் ஏற்படும் பிரச்னையால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று கல்வி ஆண்டு மாணவர்கள் இன்னும் பட்டம் பெறாமல் உள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநரின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் பதிலடி கொடுப்பார் - அமைச்சர் ரகுபதி
செந்தில் பாலாஜி விவகாரத்தில் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. நான் இப்போது எனது ஆய்வு சம்மந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். கண்ணதாசன் பாடல் வரிகள் ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என்ற பாடல் போல அந்த விவகாரத்தை அமைதியாக இருந்து கண்காணித்து வருகிறேன்'' என்றார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள், அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் அவர் மீது குற்றம் சாட்டினார். இப்போது அவர் குற்றவாளி இல்லை எனக் கூறுகிறார் என்ற செய்தியாளர் கேள்விக்கு, 'அரசியலில் இந்த விவகாரம் எல்லாம் மிகவும் சகஜமானது. முதலில் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார்.
பின்னர் கூட்டணி வைத்தார். ஆனால், மக்களுக்கு நல்லது நடந்தால் போதும். திமுக ஆட்சியில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஒட்டுமொத்த நிர்வாகத்தில் ஏற்படுகிற பிரச்னை தான். மேலும் ஆங்காங்கே சிறு சிறு பிரச்சனைகள் நடக்கத்தான் செய்யும். அதையும் தவிர்க்கவும் முடியாது’ என்றார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்.. டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக ஆஜர்..!