புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கோவனூர் பகுதியில் வசித்து வருபவர் தமிழரசன் என்பவரின் மனைவி சாந்தி. இவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடந்த இரண்டு நாள்களாக நோட்டமிட்டது.
தலையில் வெட்டு
இந்த நிலையில், நேற்று (டிச.24) அக்கும்பல் சாந்தியின் வீட்டுக்கு குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்தது. அக்கும்பலில் ஒருவர் சாந்தியின் தலையில் திடீரென அரிவாளால் வெட்டி விட்டு, அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது.
பின்னர் சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு கூடிய பொது மக்கள் அக்கும்பலில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னமராவதி காவல் துறையினர், பிடிப்பட்ட ஒருவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
வலை வீச்சு
விசாரணையில் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய நான்கு பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக, தலையில் வெட்டு காயமடைந்த சாந்தியை மீட்டு பொன்னமராவதி வலையபட்டி பாப்பாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்தனர்.
எஸ்.பி ஆய்வு
இதைத் தொடர்ந்து, சாந்தியின் வீட்டுக்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னமராவதி பகுதியில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு!