புதுக்கோட்டை: விராலிமலை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் தினேஷ் பாபு(26). நீட் தேர்வு முடித்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
இருப்பினும் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாகவே வேலை கிடைக்காததால் தினேஷ் குமார் மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தினேஷ் பாபு தனது குடும்பத்தினரிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் பழனிசாமி தனது மகனை தேடி இலுப்பூர் சாலையில் உள்ள கொடிக்கால்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் தனது மகனின் செருப்பு கிடந்ததை கண்ட அவர் அங்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் மகன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் தினேஷ் குமாரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல இலவச ஆலோசனை மையங்கள்: தற்கொலைத் தடுப்பு மையம் - 104, சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.
இதையும் படிங்க: பணத்திற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது