புதுக்கோட்டை: இச்சடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வு இன்று (நவ. 23) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், "இரட்டை இலை இருந்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தற்போது எவ்வளவு பலவீனம் அடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை மறைப்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்தும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தொண்டர்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்.
அதிமுக தற்போது வட்டார கட்சியாக பலவீனம் அடைந்து வருகிறது. இதனால்தான் ஓபிஎஸ், கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் அமமுக யாருடம் கூட்டணி என்பது தெரியவரும். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணையை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு. இதுபோன்று ஆளுநர் காலதாமதப்படுத்தினால் நாடு முழுவதும் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக, மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிர்வாக திறமை இன்மைதான் இந்த ஆட்சியில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால், திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்து மக்கள் திமுக ஆட்சியை கொண்டுவந்தனர். ஆனால் தற்போது திமுக ஆட்சி மீது பொதுமக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வந்தால் மாற்று சக்தியாக இருக்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். அறநிலையத்துறையில் நடைபெறும் ஊழல்களை சரி செய்ய வேண்டும் என்று கூறுவது தான் சரி. அதற்காக அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்று கூறுவது சரியான முடிவு அல்ல.
ஊழல் செய்யும் பலரை பாதுகாக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவதும் தவறு. எடப்பாடி பழனிசாமி உடன் பயணிப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விருப்பமில்லை. கொடநாடு கொலை வழக்கில் காவல்துறையினர் விரைந்து விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு விடிவு வரும் என்றுதான் திமுக வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தை அதல பாதாளத்திற்கு கீழே தள்ளிவிட்டு தான், ஆட்சியை விட்டு திமுக போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஏமாற்றினார்.
அதன் பின்னர் ஒவ்வொருவராக ஏமாற்றி வருகிறார். அதேப்போல, தான் தற்போது சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டிருப்பது போல நடித்து அவர்களை ஏமாற்றி வருகிறார். சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு இனி ஒருபோதும் வராது" என்று கூறினார்.
இதையும் படிங்க: "தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை... ஒரு நடிகையாக அவர்களை மதிக்கிறேன்" - விசாரணைக்கு பின் மன்சூர் அலிகான்!