உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதன் பரவலைத் தடுக்க, தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டாம்கட்டப் பரவல் நிலையை அடைந்திருக்கும் கரோனாவைத் தடுக்க, ஜூன் 30ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்களித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செய்த விளைப்பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.
குறிப்பாக, வறட்சியான மாவட்டமான பெரம்பலூரை அடுத்துள்ள வடக்கு மாதவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள், பூசணிக்காய்கள் உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படும் பூசணிக்காய்களின் விற்பனையை நம்பி இங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகளளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் உள்ளனர்.
ஆனால், தற்போது சென்னை கோயம்பேடு சந்தை, மதுரை சந்தை போன்ற முக்கியமான சந்தைகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து வசதியில்லாததாலும், விற்பனை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. மறுபுறம், வெட்டப்படாமல் செடியிலேயே இருப்பதால் அரைகுறையாய் பழுத்து, அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் விற்பனைக்கும் பயனற்றதாகியுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய வடக்கு மாதவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா, “மாற்று பயிரிட விரும்பி ஏரி மண்ணை விலைக்கு வாங்கி நிலத்தில் நிரப்பி, இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து, சாகுபடி செய்த பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் மட்டுமல்லாது, உள்ளூர் வியாபாரமும் முற்றிலும் முடங்கியுள்ளது” என வேதனை தெரிவித்தார்.
வறட்சி மிகுந்த பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்காக விலை கொடுத்து, தண்ணீர் வாங்கி விவசாயம் செய்துவந்த காரணத்தால் அதற்கான கடனையும் செலுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மற்றொரு விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், “கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமண உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்படுவதாலும், கோயம்பேடு சந்தை உள்ளிட்ட சந்தைகள் மூடப்பட்டுள்ள காரணத்தினாலும் வியாபாரிகள் பூசணிக்காய்களைக் கொள்முதல் செய்ய அஞ்சுகின்றனர். இதனால் என்னிடம் மட்டும் இந்த 30 டன் பூசணிக்காய் தேக்கமடைந்துள்ளன. இந்த பூசணிக்காய் தேக்கமடைந்த காரணத்தினால், சுமார் ஐந்து லட்ச ரூபாய் முதல் ஆறு லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது” எனக் கவலை தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பெரும் இன்னலுக்குள்ளாகியிருக்கும் தங்களின் துயர் துடைக்க, விளைந்த பூசணிக்காய்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே வடக்கு மாதவி விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதையும் படிங்க : வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள்