பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். வானம் பார்த்த பூமி. மழையை நம்பியே இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இதனிடையே மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் கிடையாது. பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை என நான்கு ஒன்றியங்களைக் கொண்டதாகும். இம்மாவட்டம் வறட்சியான மாவட்டமாக இருந்து வருகிறது.
கடுமையான வெயிலின் காரணமாக இம்மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஏரி குளங்களில் உள்ள நீர் வற்றிப் போய் வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. மேலும், கிணற்றிலும் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் மேலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு நீண்ட தூரம் சென்று பொதுக்கிணற்றில் இரண்டு மற்றும் மூன்று குடங்கள் மட்டுமே எடுத்துவரும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பொதுக்கிணறு ஒன்று மட்டுமே உள்ளதால் தேவையான குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். வருகின்ற மே மாதங்களில் தண்ணீரின் தேவை இன்னும் அதிகமாகும் என்பதால், இந்தக் கிணற்றில் உள்ள நீரும் குறைந்துவிட்டால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு பெரும் அல்லல் படநேரிடும்.
இந்தக் குடிநீர் பஞ்சத்தை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.