பெரம்பலூர்: வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர், பட்டு (53). சிறுவயதிலேயே கணவரை இழந்த பட்டு, தனது மூன்று குழந்தைகளையும் கூலிவேலை பார்த்து காப்பாற்றினார். இந்த நிலையில் அவர் 2017ஆம் ஆண்டு வேப்பந்தட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக சேர்ந்தார்.
பார்ப்பது தினக்கூலி வேலை என்றாலும் தனக்கு கிடைத்த தூய்மைப் பணியை கண்ணும் கருத்துமாக பொறுப்புடன் செய்துவந்துள்ளார். வார்டு வார்டாக வண்டியை தள்ளிக்கொண்டே குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த பட்டு, தான் இறக்கும்போது தூய்மைப் பணியாளர் சீருடையை அணிந்தவாறே இறக்கவேண்டும் வேண்டும் என்று சகப் பணியாளர்களிடமும், உறவினர்களிடமும் அவ்வப்போது கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் தூய்மைப்பணியாளர் பட்டுவிற்கு நள்ளிரவில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தனது இறுதிகாலம் நெருங்கிவிட்டதை முன்கூட்டியே கணித்த பட்டு, தன்னுடைய தூய்மைப் பணியாளர் சீருடையை உறவினர்களிடம் கேட்டுவாங்கி அணிந்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அவரின் உயிரும் பிரிந்துள்ளது. பட்டு அவரது கடைசி ஆசையான தூய்மைப் பணியாளர் சீருடை அணிந்தவாறே உயிரை விட்டது சக தூய்மைப் பணியாளர்களிடமும் உறவினர்களிடமும் பெரும் சோகத்தையும் நெகிழ்வையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
பார்ப்பது கடைநிலை பணியான துப்புரவு பணியே ஆயினும் அதன் மீது அவர்கொண்ட விசுவாசத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதை தூய்மைப் பணியாளர் பட்டு போன்றவர்களின் மூலம் காலம் நமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கிறது என்றே கூறலாம்.
இதையும் படிங்க: இளைஞர் வெட்டிப் படுகொலை - மதுரை மாநகரில் பரபரப்பு!