பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி ஆலயம். இவ்வாலயம் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டத் தலமாகவும், வியாக்ரபாத முனிவர் பூஜித்து சாப நிவர்த்திபெற்றத் தலமாகவும் விளங்குகிறது.
சகல நோய்களை தீர்க்கக்கூடிய நத்தியா வட்டையை தல விருச்சமாக கொண்ட இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பெரு விழா கொடியேற்றம் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து இழுக்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி, மதனகோபால சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க திருத்தேர் தேரோடும் வீதிகளில் அசைந்து ஆடிவந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி, பெரம்பலூர் நகர் முழுவதும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.