பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், சுமார் 210-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி, மாணவர்களின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளால் பசுமைப் பள்ளியாக மாறி உள்ளது.
நாட்டின் முதுகெலும்பு வேளாண்மை என்பதைப் பறைசாற்றும் வகையில், இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து, அதைப் பள்ளியின் மதிய சத்துணவிற்கு வழங்கி வருகின்றனர். மேலும் நவீன உரங்கள் ஏதுவுமின்றி, இயற்கை உரங்கள் மூலமாக மண்ணின் வளத்தைக் காத்து, காய்கறிகளைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பசுமையைப் பள்ளியில் கத்தரிக்காய், புடலங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளையும், அரைக்கீரை, அகத்திக் கீரை, வல்லாரை கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட கீரை வகைகளையும் விளைவிப்பதோடு, காய்கறி தோட்டத்திற்குப் பந்தல் அமைத்து, விடுமுறை நாட்களிலும் தன்னார்வத்தோடு மாணவர்கள் பேணிக் காத்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களின் சுய ஒழுக்கம், அமைதி, தலைமைப்பண்பு அதிகரித்துள்ளதாக அப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் புகழேந்தி பெருமிதத்துடன் கூறுகிறார். மேலும் தனியார்ப் பள்ளிக்கு நிகராக, சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் அதற்கான சீருடையில் பணிகளை மேற்கொள்வது கூடுதல் சிறப்பு.
இதையும் படிங்க: தயாரானது தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை..! மாெழிமாற்றம் செய்ததும் அரசிடம் சமர்பிப்பு!
மேலும், பள்ளியின் மதிய சத்துணவிற்கு மாணவர்கள் விளைவிக்கும் காய்கறிகளைப் பயன்படுத்துவதால், காய்கறிகளை மாணவர்கள் வீணாக்காமல் உண்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். கற்றல், கற்பித்தல் பணிகளோடு இயற்கை வேளாண்மையை விளைவித்து வரும் து.களத்தூர் பள்ளி மாணவர்களின் செயல்பாடு, மாணவர்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் மற்ற அரசுப்பள்ளிக்கு முன் உதாரணம்.
இதில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் காய்கறி தோட்டங்களை வகுப்பு வாரியாக அமைத்துப் பராமரித்து வருகின்றனர். பசுமரத்தாணி போல என்ற உவமைக்கு ஏற்ப, இளம் வயதில் மாணவர்களின் மனதில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் இப்பசுமைப் பள்ளி, மற்ற அரசுப்பள்ளிகளுக்கு முன் உதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படிங்க: சிறையில் உள்ள பெண் சமூக ஆர்வலருக்கு அமைதிக்கான நோபல் பரிசு.. யார் இந்த நர்கீஸ் முகமதி?