பெரம்பலூர் மாவட்டம், வி களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, அதே மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளார். தன்னுடைய சொந்த நிலம் என்று கூறி மல்லிகா இந்த நிலத்தை அவருக்கு விற்றுள்ளார்.
இந்நிலையில் அப்துல்லா தன்னுடைய மகள் திருமணத்திற்காக தான் வாங்கிய நிலத்தை விற்க முயன்றபோது, அது புறம்போக்கு நிலம் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், புறம்போக்கு நிலத்தை விற்ற மல்லிகா மீது நிலமோசடி வழக்குப்பதிவு செய்ய வேண்டியும், தனது பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்துல்லா மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியதால், எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.