பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய நாட்டிற்கான மலேசிய தூதரும், மலேசிய நாட்டின் ஹை கமிஷனருமான, டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கரோனா தொற்று காரணமாக மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர். இதனால் மலேசியா நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, மட்டுமின்றி பல்வேறு தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரத்தில் மந்த நிலையும் நிலவியது.
மலேசிய அரசாங்கம் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வினை தொடர்ந்து அங்கு மீண்டும் சகஜ நிலை திரும்பும். மலேசியாவை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பவுள்ளனர். அதேபோல சர்வதேச விமான சேவையும் தொடங்கப்படவுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வழக்கம்போல செயல்படும்.
உக்ரைன் - ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மலேசியாவில் படிக்கும் ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கேயேதான் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவில்லை. எனவே மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
இதையும் படிங்க: கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு