பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரசலூர் கிராமத்தில் உள்ள ஏரி, சமீபத்தில் பெய்த மழை காரணமாக 15 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. இந்நிலையில், கடந்த ஜனவரி 27 ஆம் தேதி ஏரியின் கரை வலுவிழந்த காரணத்தால் உடைப்பு ஏற்பட்டு ஏரியிலியிருந்து நீர் அனைத்தும் வெளியேறி நெல், மஞ்சள், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் வயல்களிலுள்ள பயிர்கள் வீணாய் போனது.
மேலும் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் சேமித்த நீர் வீணாய் போனதாலும், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் புகுந்ததாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் உடைந்த ஏரி பகுதி, தண்ணீர் புகுந்த வயல்களை குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, ஏரியை சீரமைக்கும் நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டனர். இந்நிகழ்வில், பொதுப்பணி துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஏரியை உடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் - தடுத்து நிறுத்திய மக்கள்!