தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின்போது ராமதாஸ் திமுகவை மிக கடுமையாக விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமதாஸ் பேசியதாவது, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக இருக்கும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் ஒரு கல்விக் கொள்ளையர் என்றும், இந்த தேர்தலில் திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும் எனவும் விமர்சித்தார்.
மேலும், திமுகவோடு கூட்டு சேர்வது மாலை போட்டு கழுத்தை அறுப்பதற்கு சமம். இந்த தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை ஆகும் என ராமதாஸ் தெரிவித்தார்.