பெரம்பலூர் மாவட்டம் எசனை பாப்பாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சுரேஷ்(40). இவர் தற்போது ரோவர் வளைவு பாரதி நகர் பகுதியில் வசித்துவருகிறார். இவர் கொலை மிரட்டல், ஆள் கடத்தல், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர் ஆவார்.
இதனிடையே ஆகஸ்ட் மாதம் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த பிளிக்ஸ், திருச்சியைச் சேர்ந்த ஜாகீர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து நூதன முறையில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார் சுரேஷ்.
அதன்படி மதுரையைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன், லட்சுமணன், மூர்த்தி, கார்த்திக், வினோத் ஆகிய ஐந்து பேரிடம், 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் கூடுதலாக தரகுத் தொகை 500 ரூபாய் தருகிறோம் என்று கூறியதால், அவர்கள் ரூ 78 லட்சத்து 80 ஆயிரம் பணத்துடன் பெரம்பலூருக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து சுரேஷ் அலுவலகத்துக்கு வந்த மதுரையைச் சேர்ந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்த ரூ.78லட்சத்து 80ஆயிரம் பணத்தை சுரேஷ் கும்பலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் பணத்தை எடுத்துக் கொண்டு, வாகனத்தில் ஏறி தலைமறைவாகியுள்ளனர். பணத்தை பறிகொடுத்ததை தெரிந்துகொண்ட மதுரையைச் சேர்ந்த ஐவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்
இந்த நூதன கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ரமேஷ், பெரியசாமி, கண்ணன், மணிகண்டன், சுரேஷ் மனைவி சங்கீதா, அவரின் மாமியார் உட்பட ஆறு பேரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளி சுரேஷ் பிடிபட்டால் மட்டுமே வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது தெரிய வரும் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.