பெரம்பலூர்: திருமாந்துறை என்னும் ஊரைச் சேர்ந்தவர், அருண் சற்குணம்(வயது 43). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 5ஆண்டுகளாக இதய நோயினால் சற்குணம் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனை சிகிச்சைக்காக சென்றபோது, மருத்துவர்கள் அதிக செலவாகும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என எண்ணி அதற்காக விண்ணப்பித்து உள்ளார். காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க குடும்ப அடையாள அட்டை அவசியம். சற்குணம் தனியாக வசித்து வருவதால், அவரிடம் குடும்ப அடையாள அட்டை இல்லை.
மேலும் கடந்த 5 வருடங்களாக குடும்ப அட்டை வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் உள்ளார். இதனால் திருமாந்துறையில் உள்ள சற்குணம் வீட்டிற்கு அலுவலர்கள் விசாரணைக்கு சென்று உள்ளனர். சற்குணம் திருப்பூர் பகுதியில் பணிபுரிந்து வருவதால், விசாரணைக்கு சென்ற அலுவலர்கள் வீட்டில் ஆள் இல்லை என்ற காரணத்தால் மனுவினை நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில், குடும்ப அட்டை கோரியும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை கோரியும், கற்பகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று உள்ளார். அப்போது அலுவலகம் வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம், அருண் சற்குணத்திடம் என்ன கோரிக்கை என கேட்டறிந்தார்.
அருண் சற்குணத்தின் நிலையினை உணர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் உடனடியாக அவருக்கு குடும்ப அட்டையும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அருண் சற்குணத்திற்கு புதிய குடும்ப அட்டை மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது.
இதை சற்றும் எதிர்பாராத அருண் சற்குணம், கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நன்றி தெரிவித்தார். 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், 'எனது கோரிக்கைக்கு ஒரு மணி நேரத்தில் தீர்வு கண்டு மறு வாழ்வு அளித்துள்ளீர்கள். என் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், 'மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே எங்கள் பணி. மக்களின் நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் அதை செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது' என்றும் கூறினார்.
இதையும் படிங்க:சென்னையில் ஜி20 அமைப்பின் நிதி கட்டமைப்பு மாநாடு - இன்றும், நாளையும் நடக்கிறது!