பெரம்பலூர்: வாலிகண்டபுரம் அடுத்து உள்ள தம்பை கிராமத்தைச் சேர்ந்தவர், பூமாலை. இவரது மகன் வெள்ளையன் (38). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று (ஜூலை 27) மதியம் வாலிகண்டபுரம் தம்பை நடுவே தேசிய நெடுஞ்சாலையில் சற்று தொலைவில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகே இருந்த பாரில் குடித்துவிட்டு அங்கேயே மயங்கி கிடந்து உள்ளார்.
இதைக்கண்ட மற்றவர்கள் வழக்கம்போல் இவர் மது போதையில் மயங்கி கிடப்பதாக எண்ணி கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். அதன் பின்னர் மாலை நேரமாகியும் அவர் எழுந்து செல்லாததால் அங்கிருந்த நபர்கள் அவரை தூக்கிப் பார்த்தபோது வெள்ளையன் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்த தகவல் கிராம மக்கள் மற்றும் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 880 கேரட் ஒரே கல்லாலான வைடூரியம் பொருந்திய தங்க கிரீடம் விநாயகருக்கு அணிவிப்பு!
மேலும், வாலிகண்டபுரம் மற்றும் தம்பையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மது குடித்த வெள்ளையன் எப்படி இறந்தார் என்றும், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, வாலிகண்டபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், உயிரிழந்த வெள்ளையன் என்பவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த சம்பவம் நடந்தது குறித்து முறையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்களை களையச் செய்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் அருந்தியதாக விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு பரபரப்பு உள்ளாக்கியது என்பது குற்ப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம்