நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இரு வல்வில் ஓரி விழாவை அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இவ்வாண்டு பொது முடக்கத்தின் காரணமாக வல்வில் ஓரி விழா மற்றும் ஆடிப்பெருக்கு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், அரசியல் கட்சித் தலைவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அனுமதி பெற்ற நபர்களை தவிர வேறு யாரும் கொல்லிமலைக்கு செல்வதை தடுக்கும் விதமாக அடிவாரப் பகுதியான காரவள்ளியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்தனர்.
மேலும், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா கொல்லிமலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வாண்டு ஊரடங்கு காரணமாக கொல்லிமலை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.