நாமக்கல்: திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற ரிக் தயாரிப்பு நிறுவனமான பி.ஆர்.டி ரிக் நிறுவனமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 360 டிகிரியிலும் சுழலும் வகையில், பாறைகளை ஆறு இன்ச்(inch) அளவுக்கு உடைத்து 80 மீட்டர் துளை ஏற்படுத்தக்கூடிய பிஆர்டி ஜிடி5 என்ற ரிக் வாகனத்தை தயாரித்தது.
இதனை 85 லட்சம் கொடுத்து வாங்கிய திருச்செங்கோடு மண்டகபாளையம் பகுதியைச் சேர்ந்த தரணி ஜியோ டெக் என்ற நிறுவனம், மலைகளை உடைத்து சுரங்கப் பாதைகள் அமைக்க பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் அமைக்கப்பட்ட சுரங்க பாதையில் மண் சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து ஆக்ஸிஜன் ஆகியவற்றை சுரங்கத்திற்குள் எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து யோசித்து வந்தனர். இந்நிலையில், தரணி ஜியோ டெக் நிறுவனத்தை அணுகிய மீட்புக் குழுவினர் 6 இன்ச்(inch) அகலத்தில் சுமார் 110 அடி ஆழத்தில் துளையமைத்து, அதன் மூலம் சிமெண்ட்ரி டெக்னாலஜி மூலம் துளை அமைத்து கேசிங் பைப் உடன் அனுப்பினர்.
அதன் மூலம் எந்த சரிவும் ஏற்படாமல் ஆழத்தில் சிக்கி இருந்தவர்களை எட்டும் வகையில் குழாய்கள் அமைத்து உணவு, மருந்து, குடிநீர் மற்றும் கேமராவையும் அனுப்பி மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களை மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதுகுறித்து பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் மற்றும் தரணி ஜியோ டெக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தரணி ஜியோ டெக் நிறுவனம் மூலம் பத்தாண்டுகளாக பல்வேறு சவாலான பணிகளை எடுத்து செய்து வருகிறோம்.
கடந்த ஞாயிறன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை சரி செய்து தர வேண்டும் என எங்களிடம் கேட்கப்பட்டது. அதற்காக பிஆர்டி சிடி 5 என்ற வகை 360 டிகிரியிலும் செயல்படக்கூடிய, தொடர்ந்து 80 மீட்டர் அளவுக்கு துளையிடக்கூடிய வல்லமை கொண்ட இயந்திரம் எங்களிடமிருந்தது.
மேலும் சிமெண்ட்ரி சிஸ்டம் என்ற ஒரு சிஸ்டத்தை நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வைத்திருந்தோம். சிமெண்ட்ரி சிஸ்டம் என்றால் துளையிடும் போது துளையிட்டதற்கு பின் கேஸ்டிங் பைப் பொருத்துவதுதான் வழக்கம், ஆனால் இந்த சிமெண்ட்ரி சிஸ்டத்தில் துளையிடும்போதே உடன் செல்லும் கேஸிங் பைப் ட்ரில்லரை வெளியில் எடுக்கும் போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும்.
இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல துளை அமைத்து பணியை மேற்கொள்ளும் போது, முதல் முறையாக இரும்பு ராடு ஒன்று குறுக்கிட்டதால் தோல்வி கண்டோம். இரண்டாவது முறை ஒரு தடங்கல் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக வெற்றி பெற்றோம். இதன் மூலம் தான் தற்போது சுரங்க பாதைக்குள் சிக்கியிருக்கிற தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் 3 லாரிகளில் திடீர் தீ விபத்து.. ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!