நாமக்கல்: குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள திமுக நகர செயலாளர் செல்வம் தலைமையில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் சென்றனர்.
அப்போது பூமி பூஜை விழாவிற்கு வந்த சுயேட்சை நகர மன்றத் தலைவர் விஜயகண்ணன், இந்த பூமி பூஜை நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்தால் நடைபெறும் நிகழ்ச்சி, இங்கே அரசியல் கட்சியினருக்கு அனுமதி இல்லை. நகரமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
திமுகவினர் இது தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி, அதுமட்டுமன்றி இது ஒரு பொது நிகழ்ச்சி, எனவே நாங்கள் கலந்து கொள்வோம் என்று தெரிவித்தனர். இதனால் நகர்மன்ற தலைவர் விஜய கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் திமுக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்த பிறகு பூமி பூஜை நடைபெற்றது. இதனையடுத்து அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
இதையும் படிங்க: நாமக்கல்: பாதுகாப்பு முகாம்களுக்கு குப்பை வண்டியில் செல்லும் உணவுகள்