நாமக்கல்: பரமத்தியில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில், மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தங்களது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு மக்கள் நலம்பெற வேண்டும். அடிப்படை வசதிகள் பெற வேண்டும் என்பதற்காக அமமுக கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. தீயசக்தி திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தமிழின துரோகி எடப்பாடி தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் கம்பெனி ஏரி, குளங்களைத் தூர்வாரினார்களோ இல்லையோ, தமிழ்நாடு கஜானாவைத் தூர்வாரிவிட்டனர். கரோனாவால் எந்த அரசுப் பணிகளும் நடைபெறாத நிலையில் துணை முதலமைச்சர் ஆறு லட்சம் கோடி கடன் இருப்பதாகத் தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது.
அமமுகவின் முக்கியப் பணி எதிரி திமுகவையும், துரோகி எடப்பாடி பழனிசாமியையும் ஆட்சியில் அமரவிடக் கூடாது. கரூரில் தேர்தல் நடக்கவில்லை, அங்கு வெட்டு குத்துதான் நடைபெறுகிறது.
இதுவரை 500 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் அவர்களாகத் தேர்தலை நிறுத்திவிடுவார்கள் அல்லது தேர்தல் ஆணையமே தேர்தலை ரத்து செய்துவிடும். அந்த அளவு பதவி வெறிக்காகச் சண்டை நடக்கிறது.
பதவி வெறி கண்டவர்களும், மக்கள் பணத்தைச் சுரண்டி தின்றவர்களும் பதவிக்காகப் பேயாக அலைகின்றனர். இப்போது நடைபெறும் பேய் ஆட்சியை ஒழித்துவிட்டு பிசாசு கையில் ஆட்சியில் கொடுத்துவிடாதீர்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட, அனைவரும் சம உரிமையோடு வாழ்ந்திட அமமுக கூட்டணி ஆதரவு தாருங்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.
கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் செய்து மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்' - இறைஞ்சும் சரத்குமார்