திருச்சி: தமிழ்நாட்டின் நடுப்பகுதியான நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர், கொல்லி மலை. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த மலையின் தென் சரிவும், மேற்குச் சரிவும், கிழக்குச்சரிவும் சமவெளிகள் இல்லாமல், கிட்டத்தட்ட 4,000 அடி செங்குத்தாக உயர்ந்து செல்கின்றன.
மீதமுள்ள வடக்குச் சரிவு, காட்டாறுகளால் அறுத்துச் செல்லப்பட்ட வரிசை வரிசையான படுகைகள் நிறைந்து பிளவுபட்டுக் காணப்படுகிறது. இந்த படுகைகள் வடகிழக்குப் பக்கமாக ஓடுகின்றன. பழைமை வாய்ந்த நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்தப் பகுதியை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டு வந்தார் என்பது வரலாற்றுச் சான்றுகளில் ஒன்று. அதிலும், ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடலும் இதற்கு சான்றாக புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. மேலும், கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
இப்படிப்பட்ட கொல்லிமலையின் உச்சியில், அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
எனவே, அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால், இக்கோயில் 'மீன் கோயில்' என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. மேலும், அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவியும் அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. சுமார் 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால், மனிதர்களின் பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வருகிறது.
அதேபோல், ஆற்றின் மற்றொரு புறத்தில் மாசில்லா அருவி உள்ளது. மேலும், உண்டுகொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பெரியசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள தெய்வம் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த கோயிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் கிடையாது. இங்குதான், மாசி மாதத்தில் மிகவும் விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி வல்வில் ஓரியின் நினைவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் மட்டும் மாசி பெரியண்ணசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பெரியசாமிக்கு பலியிடப்பட்டு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.
அதிலும், பக்தர்கள் வேண்டியது நிறைவேறினால், வெங்கல மணியை தங்களின் வசதிக்கு ஏற்ப வகைவகையாக மக்கள் கட்டிவிடுகின்றனர். இப்படிப்பட்ட பல்வேறு சுவாரஷ்யங்கள் நிறைந்த கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த மலைப்பாதையின் தூரம் 26 கி.மீ.
மேலும், இந்த மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் கனரக வண்டிகளும் செல்ல முடியும். இந்த ஆண்டு ஆடி 18ஆம் நாளான ஆகஸ்டு 3ஆம் தேதி திருவிழா கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 300 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சோழர் கால கோயிலின் தேரோட்ட விழா!