நாமக்கல்: தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்ட தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து, கடந்த 1987 ஆம் ஆண்டு நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைவராக நாமக்கல் செங்கோடன் பொறுப்பேற்றார்.
அவரது பதவிக்காலத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டார். இதையடுத்து, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 95 சங்கங்கள் இணைந்து, தமிழக அளவில் மிகப் பெரிய சம்மேளனமாக உருவாகியது. அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வரை தலைவராக செயல்பட்டார்.
அவர் மறைவிற்கு பிறகு, ஒரு முறை மட்டுமே சம்மேளன தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. மற்ற நேரங்களில் ஒருமனதாக தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக சங்ககிரி குமாரசாமி, செயலாளராக நாமக்கல் வாங்கலி, பொருளாளராக சேலம் தன்ராஜ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
அவர்களது பதவிக்காலம் முடிவடைந்ததால், சம்மேளனத்திற்கு 2022 - 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 93 லாரி உரிமையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த, ஒவ்வொரு சங்கத்திற்கும் 5 நிர்வாகிகள் வீதம் 465 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றிருந்தனர்.
சம்மேளனத்தின் துணைத்தலைவர் (தெற்கு மண்டலம்) பதவிக்கு மதுரையைச் சாத்தையா, துணைத்தலைவர் (வடக்கு மண்டலம்) தர்மபுரியைச் சேர்ந்த நாட்டான் மாது, துணைத் தலைவர் (மேற்கு மண்டலம்) பதவிக்கு கோவையைச் சேர்ந்த முருகேசன், துணைத் தலைவர் (கிழக்கு மண்டலம்) பதவிக்கு திருச்சியைச் சேர்ந்த சுப்பு, துணைத் தலைவர் (மத்திய மண்டலம்) பதவிக்கு நாமக்கல்லைச் சேர்ந்த சின்னுசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, சம்மேளன தலைவர் பதவிக்கு நாமக்கல்லைச் சேர்ந்த வாங்கிலி, சேலத்தைச் சேர்ந்த தன்ராஜ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு பரமத்திவேலூரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் பிபிஎஸ் ராஜூ என்கிற ராமசாமியும், பொருளாளர் பதவிக்கு நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சீரங்கன், நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த தாமோதரன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
நாமக்கல் வள்ளிபுரம் அருகில் உள்ள மாநில சம்மேளன கட்டிடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 452 வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் சம்மேளன அலுவலகத்தில் வைத்து எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் சேலம் தன்ராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் தேர்தலில் பரமத்தி லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜூ என்கிற ராமசாமியும், பொருளாளர் தேர்தலில் நாமக்கல் ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தாமோதரனும் வெற்றிபெற்றனர்.
இதனையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
இதையும் படிங்க: நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை..!