நாமக்கல்: இரவில் விசைத்தறி ஓட்டும் பணியை மேற்கொண்டு, அதில் வரும் வருமானத்தை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தி வருகிறார் குமாரபாளையம் தொகுதி கம்யூனிஸ்ட் (எம்எல்) வேட்பாளர் சுப்ரமணி.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியில், கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி சார்பில் வேட்பாளராக சுப்ரமணி போட்டியிடுகிறார். ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளரான இவர், குமாரபாளையம் வேதாந்தபுரத்தில் வசித்து வருகிறார். அடிப்படையில் இவர் விசைத்தறி தொழிலாளி, தொழிற்சங்க பணிகளுக்கான நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் நெசவுத்தொழிலுக்கு செல்வது வழக்கம்.
கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டதால், வீட்டு செலவுக்கே பணமில்லாமல் சிரமப்பட்டார். அதே நேரம் தேர்தல் செலவுக்கும் பணம் தேவைப்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரத்தில் விசைத்தறி பட்டறைக்கு வேலைக்கு செல்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பகல் நேரங்களில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதுகுறித்து சுப்ரமணி கூறுகையில், குமாரபாளையத்தில் அதிமுக ஆட்சியில் குழந்தை விற்பனை, கிட்னி விற்பனை, கருமுட்டை விற்பனை என்ற அவலம் இன்றளவும் நீடித்து வருகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பணி பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்த்து களமிறங்கியுள்ளேன். தேர்தல் பிரசாரத்திற்கு என்னுடன் வரும் தோழர்களுக்கு தேநீராவது வாங்கிக் கொடுத்தாக வேண்டும். எனது சொற்ப வருமானத்தில் சேமித்ததை செலவளித்துவிட்டேன். இதற்கு மேலும் செலவிட பணமில்லை. எனவே, இரவில் விசைத்தறி ஓட்டி, அதில் கிடைக்கும் ₹500 சம்பளத்தை பகலில் செலவிட்டு வருகிறேன் என்றார்.