நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில், 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரையிலான கணக்குகளை கூட்டுறவு சங்க துணை பதிவாளர் வெங்கடாசலம் தணிக்கை செய்தார். அப்போது, விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதாக கூறி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர், நாமக்கல் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு காவல் துறையினரிடம் புகார் செய்தார். இதன்கீழ் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய செயலாளர் ரவி, சங்க பணியாளர்கள் கதிர்வேல், தங்கராஜ், ராவூத்தன், கம்பராயன், தங்கவேல் சங்கத்தின் முன்னாள் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த சபரி மற்றும் இயக்குனர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர்.
விசாரணையில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சங்கத்தின் தற்போதைய செயலாளர் ரவி, சங்க பணியாளர்கள் கதிர்வேல், தங்கராஜ், ராவுத்தன், கம்பராயன், தங்கவேல் ஆகியோரை காவல் துறையினர் இன்று (அக்.08) கைது செய்தனர்.
இதையடுத்து, சங்கத்தின் முன்னாள் தலைவரும் அதிமுகவின் நிர்வாகியுமான சபரி, சங்கத்தின் ஆறு இயக்குனர்கள் என 7 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை காவல் துறையினர், தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது!