மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போதுவரை டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 93 காசுகளும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயும் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் டீசல் விலை குறையாமல் தொடந்து அதிகரித்துவருவது கண்டனத்திற்குரியது.
லாரி ஓட்டுநர்களின் தொழிலைக் காக்க டீசல் விலையை குறைத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியத்தினை ஆறு மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு ஆறு மாத வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும்.
சுங்கச் சாவடிகளில் லாரிகளுக்கு கட்டண சலுகை அளிக்கவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் செல்லும்போது இரவில் கொள்ளையர்களால் தொல்லை என்றால், பகலில் காவல்துறையினரும், ஆர்.டி.ஓ உள்ளிட்ட அலுவலர்களும் விதிமீறல் என்ற பெயரில் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் எங்களது நியமான கோரிக்கைகளை ஏற்று இதனை பரிசீலிக்க வேண்டும். இல்லை எனில் கரோனா வைரஸ் தொற்று பரவல் முடிவிற்கு வந்த பிறகு லாரி உரிமையாளர்களுடன் ஆலோசித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனக் கூறினார்.