நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை மலைக்கிராமம். இங்கு மேலூர், கீழூர், கெடமலை என மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,224 வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை இங்கு சாலைவசதி செய்துதரப்படவில்லை.

இந்நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதன் ஒருபகுதியாக ராசிபுரம் தொகுதிக்குள்பட்ட போதமலை பகுதியிலுள்ள கீழூர், கெடமலை பகுதிகளில் உள்ள இரண்டு வாக்குசாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளுக்கான வாக்கு இயந்திரத்தை தேர்தல் அலுவலர்களும் ஊழியர்களும் கரடுமுரடான பாதையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதமலைக்கு தலையில் சுமந்து சென்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் அலுவலர்கள் இவ்வாறே வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச் செல்லும் அவலநிலை தொடர்கிறது.