நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது ஆம்னி கார் மூலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது மனைவியுடன் இன்று துணி வியாபாரம் செய்வதற்காக நாமக்கல் வந்துள்ளார்.
அப்போது, முதலைப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு எரிவாயு நிரப்பிவிட்டு, வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரை நிறுத்திய சரவணன் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் இருந்து வெளியேறினர்.
பின்னர் அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கேஸ் கசிவை கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்து, அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: வாழைக்காய் விற்பனை சரிவு