விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், தங்களது இல்லங்களிலேயே எவ்வித இடையூறுமின்றி விநாயகர் சிலைகளை வைத்துக்கொள்வதாகவும், அச்சிலைகளைக் குடும்பம் குடும்பமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இதனால், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இது குறித்து இன்று மாலைக்குள் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.